பிரம்மபுரீசுவரர் திருக்கோவில் - ஏனநல்லூர்

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : பிரம்மபுரீசுவரர்
இறைவியார் திருப்பெயர் : கற்பகாம்பாள்
தல மரம் : - -
தீர்த்தம் : - -
வழிபட்டோர் : ஏனாதி நாத நாயனார்
தேவாரப் பாடல்கள் : --

தல வரலாறு:

ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.


எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர் குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதி நாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாவரேயாயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டு விட்டால் போதும், உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும் படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். இப்பெரியார் சோழ மன்னர் படையில் ஒரு காலத்தில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர்.

இப்பெரியார் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும், வாள் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாள் பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்த வண்ணமாகவே இருந்தனர். வாள் பயிற்சி மூலம் கிடைத்த வருவாயையெல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார். இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். பாரெல்லாம் பால் பொழியும் தண் நிலவையும் கிரகணம் வந்து விழுங்குவது போல், ஏனாதி நாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லத்தான் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாள் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.

தொழில் நுட்பத்தில் ஏனாதி நாதரை விட மிக மிகக் குறைந்தவன். அதனால், அதிசூரனிடம் ஆரம்ப காலத்தில் அறியாமல் வந்து சேர்ந்த ஒரு சில மாணாக்கர்கள் கூட விவரம் தெரிந்ததும் விலகத் தொடங்கினர். இதனால் ஏனாதி நாதரிடம், ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று விளங்க, அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. முத்துச்சிற்பி முன்னால், வெத்துச்சிப்பி மதிப்பிழந்து தூக்கி எறியப்படுவது போல், ஏனாதி நாதர் முன்னால் எல்லாவகையிலும் மதிப்பிழந்து போனான் அதிசூரன்.

அதிசூரன், ஏனாதிநாதரிடம் அழுக்காறு கொண்டு பகைமை பாராட்டினான். அழுக்காறு, அவா, சினம், இன்சொல் ஆகிய தீய குணங்களை கொண்டிருந்த அதிசூரன், அன்பு, அடக்கம், பக்தி, பொறுமை, இன்சொல் ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ஏனாதி நாதரை எதிர்த்துப் போர் புரிந்து அவருடைய தொழில் உரிமையைக் கைப்பற்ற சங்கல்பம் பூண்டான். ஒருநாள், தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு, நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். சிங்கத்தின் குகை முன்னால் சிறு நரி ஊளையிடுவது போல், வீரம் படைத்த ஏனாதி நாதர் முன்னால் கோழை மனம் கொண்ட அதிசூரன் போர் பரணி எழுப்பினான். ஏனாதி நாதரே! ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் எதற்கு? அதிலும் இரண்டு ஆசிரியர்கள் தான் எதற்கு? இவ்வூரில் வாள் பயிற்சி ஆசானாக இருப்பதற்குரிய தகுதியும், திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய, நாம் உரிமைப் போர் புரிவோம். துணிவிருந்தால் போர் செய்ய வருக என்று ஊளையிட்டான். அதிசூரனின் சவாலைக் கேட்டு ஏனாதி நாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார்.

உனக்கு இம்முறையே தக்கது என்று தோன்றினால் அவ்வாறே போர் புரிவோம். நானும் அதற்கு இசைகிறேன் என்றார். இருவர் பக்கமும் படைவீரர்கள் சேர்ந்தனர். நகரின் வெளியிடத்தில் இருவர் படைகளும் போர் செய்வதற்கு வந்து குவிந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது! போரும் ஆரம்பமானது அணி வகுத்து நின்ற இருதிறத்து வில்வீரர்களும், வாள் வீரர்களும், பயங்கரமாக் தத்தம் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போர் புரிந்தனர். வாள் பிடித்த கைகளும், வேல் பிடித்த கைகளும், வில் பிடித்த கைகளும் அறுபட்டு விழுந்தன. சிரசுகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. வீரர்கள் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன.

வீரிகழல்கள் அறுபட்டு ரத்தத்தில் தோய்ந்தன. தாள்களும், தோள்களும் புண் பட்டன. இரத்தம் சிந்தின. வெளி வந்த குடல்களில் உடல்கள் பின்னிப் பிணைந்தன. அதிசூரன் படை வன்மையாக முறியடிக்கப்பட்டது. போரில் தலைப்பட்ட பகைவர் யாவரும் கொலை செய்யப்பட்டனர். போர்க்களத்தில் போர் புரிந்து மடியாதோர், ஞான உணர்வு வந்த போது, இதயத்திலுள்ள பற்று, பாசங்கள் மறைவது போல் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏனாதி நாதர் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான் அதிசூரன். வெற்றி வாகை சூடித் திரும்பினார் ஏனாதி நாதர். நாட்கள் பல கடந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது.

அதிசூரன் நேர் பாதையில் நாயனாரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் கொல்லக் கருதினான். அதற்காக வேண்டி மற்றொரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அதிசூரன், ஏவலாளன் ஒருவனை ஏனாதி நாதரிடம் அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதி நாதர் சம்மதித்தார்.

அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நான் குறித்து நேரம் கணித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதி நாதருக்குச் சேதியும் சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார். குறித்த நாளும் வந்தது அதிசூரன் வஞ்சனையால் வெல்லத் தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும், உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும், கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதி நாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்.

அதிசூரன் கேடயத்தால் தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். புலியைப் போல் பாய்ந்து சண்டை செய்தார் ஏனாதி நாதர். பூனைபோல் பதுங்கி, பதுங்கி, அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கி, ஒதுங்கிச் சண்டை செய்தான் அதிசூரன். ஏனாதி நாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். அதிசூரனின் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. ஏனாதி நாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள், அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில், அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த வசத்தையும், கேடயத்தையும் விலக்கினான்.

வெண்ணீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திருக்கிட்டார் நாயனார். அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. அவரது வாளின் கூர்மை திருவெண்ணீற்றுக்கு முன்னால் மழுங்கிப் போனது. ஆ! கெட்டேன்! பகைவன் என்று போரிட வந்தேனே! சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். இத்தனை நாளாக ஒருபொழுதும் இவருடைய நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவினை இன்று காண்கிறேனே! இவர் சிவத்தொண்டரே தான். இவரோடு, இனியும் போரிடுவது தகாத செயல் ஆகும். உண்மையை உணராமல் எவ்வளவு பெரும் பாவம் செய்ய இருந்தேன்! என் பிழையை எம்பெருமான் தான் பொறுத்தருள வேண்டும். இனிமேல் நான் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று திருவுள்ளங்கொண்ட ஏனாதி நாத நாயனார், தம் கையிலிருந்த வாளையும், கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

அத்தருணத்தில் நாயனாருக்கு வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவது இவ்வடியாரை அவமதிப்பது போலாகும். நிராயுத பாணியயைக் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்து விடும் அத்தகைய அபகீர்த்தி இவருக்கு ஏற்படா வண்ணம் இறுதி வரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பது போல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும், கேடயத்தையும் தாங்கி, எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.

பின்னர் சொல்லவும், வேண்டுமோ? அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும், தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதி நாதர் ஆவி பிரிந்தது. அதிசூரனும் ஓடி ஒளிந்தான். ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதி நாத நாயனாரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து, இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப்பற்று பாசம், பந்தம் ஆகிய எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக்கொண்ட ஏனாதி நாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான், நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெருவாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.


சிறப்புக்கள் :

ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.


போன்:  - 9944451850 / 994445185

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் 3 கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது.


ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.