வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : வில்வவனேசுவரர்
அம்மன்/தாயார் : வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : எமதீர்த்தம்
வழிபட்டோர் : சப்தகன்னிகள், வேதங்கள், தவநிதி என்ற முனிவர், மகா சிவராத்திரி மோட்சம் அடைந்த ஓரு வேடன் , யமன்
தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

திருவைகாவூர் மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம்.சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் மகா சிவராத்திரி பிறந்தது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 48வது தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 48 வது தேவாரத்தலம் ஆகும்.

வேதங்கள் வில்வ விருட்சங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம்.

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சம் அருளிய தலம்.

இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.

எல்லாம் அறிந்த மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் திருக்கடவூர்.
ஏதும் அறியாத வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் திருவைகாவூர்.

இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

அனைத்து நந்திகளும் எதிர் திசையில் நம்மைப் பார்த்து உள்ள ஒரே தலம், இங்குள்ள நந்திகள் அனைத்தும் இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

மகா சிவராத்திரி தலங்களாக போற்றப்படும் திருக்கோகர்ணம், ஶ்ரீசைலம், திருக்காளத்தி என்ற வரிசையில் திருவைகாவூரும் ஒன்றாக விளங்குவதற்கு சுவையான வரலாறு உண்டு.


தல வரலாறு:

திருவைகாவூர் மகாசிவராத்திரி நாளுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம். வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சம் அருளிய தலம்.

வேடன் ஒருவன் கொள்ளிடக் கரையிலுள்ள ஒரு புதரில் ஒரு மானைக் கண்டு அதை துரத்திச் தென்றான். மான் வேகமாக ஓடிச் சென்று அருகிலுள்ள வனத்தில் ஒரு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பூஜை செய்து கொண்டிருந்த தவநிதி என்ற முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. மானைத் துரத்திச் சென்ற வேடன் மானின் மீது குறி பார்த்து அம்பு தொடுக்க ஆயத்தமானான். முனிவர் மானை விட்டுவிடும்படி வேண்டினார். மானை விட்டுவிட வேடன்  மறுத்தான். முனிவர் தஞ்சமடைந்த மானை விடமாட்டேன் என்று கூற, அவர் மீதும் அம்பு தொடுக்க ஆயத்தமானான்.

அடியார்களை எப்போதும் காக்கும் இறைவன் ஒரு புலி வடிவில் அங்கு தோன்றி வேடனை துரத்தினார். வேடன் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலியும்,  விடுவதில்லை என்பது போல மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான், இரவு வந்துவிட, பயத்தினாலும், பசியினாலும் வேடன் தூங்காமல் மரத்தில் கண் விழித்து உட்கார்ந்திருந்தான், மரத்தின் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.அன்று மகாசிவராத்திரி தினம். அவன் உட்கார்ந்திருந்த மரம் விலவமரம்.

பொழுது புலர்ந்தது. நெடுநேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன்  பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம். பிறகுதான் அவனுக்கு விளங்கியது, இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம் என்றும், அன்றைய இரவு சிவராத்திரி என்றும் அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை - சிவபெருமானை வில்வம் கொண்டு அர்ச்சித்தோம் என்றும்.

யமன் :
மகாசிவராத்திரியை அடுத்த நாள் விடியற் காலையில் வேடன் ஆயுள் முடிகிறது. யமன் அவன் உயிரைப் பறிக்க வந்தான். நந்திதேவர் யமன்  வருவதைக் கவனிக்கவில்லை. சிவராத்திரி அன்று தனக்கு வில்வ அர்ச்சனை செய்த வேடனை யமன் பிடித்துக் கொண்டு செல்வதா எனக் கோபமுற்ற சிவபெருமான்  தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு யமனை விரட்டி அடித்தார். யமனை உள்ளே விட்டதற்காக சிவன் நந்திதேவர் மீது கோபம் கொண்டார், நந்தி யமனை தன் மூச்சுக் காற்றால் கட்டுப்படுத்தி  நிறுத்தி விட்டார்.
பின்னர் யமன் வேடனின் செயல்  யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை  என்ற  வாக்கின்படி  சிவபூஜையாகி விட்ட பெருமையை நான் அறியவில்லை என்று  சிவனை வேண்டி மன்னிப்புக் கேட்க, சிவபெருமான்   மன்னித்தருளி  யமனை வெளியேற அனுமதிக்கும்படி நந்திக்கு கட்டளையிட்டார்.

தன் பக்தியை இறைவனுக்குக் காட்ட, ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச் சென்றான். யமன் செய்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது. அக்கினி தீர்த்தம் என்று அக்கினியால் தோற்றுவிக்கப்பட்ட வேறொரு தீர்த்தமும் இங்கே இருக்கிறது.

அது முதல் அந்த ஆலயத்தில்  யார் உள்ளே நுழைகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் விதத்தில் இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வாறு இருப்பதாக ஐதீகம். இந்த ஆலயத்தின் விசேஷம்.

இரவு முழுவதும் சிவபெருமானை வில்வம் கொண்டு அர்ச்சித்ததால் வேடனுக்குச் சிவபதம் கிடைத்தது. சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து மோட்சம் அளித்தார். சிவனை தினமும் வணங்குகின்ற பலருக்கு காட்சி தராதவர் , ஒரு வேடன் மகாசிவராத்திரி அன்று அறியாமல் செய்த அர்ச்சனையை ஏற்று முக்தியும் அளித்தார். மகா சிவராத்திரியில் சிவ வழிபாடு எவ்வளவு உயர்வானது என்பதை இக்கதை உணர்த்துகிறது.


இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாபம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.  

சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது. இக்கோயில் தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும். கோவில்களில்  எல்லாம் பெரும்பாலும் சப்த மாதாக்கள் வழிப்பட்டதாகதான்  இருக்கும். இத் தலத்தில் சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர்.

உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.

வேதங்கள் வில்வ விருட்சங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம். ஊழிக் காலத்தில் அனைத்து அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் சிவபெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.


கோவில் அமைப்பு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். 11-ஆவது நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழன் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருப்பதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சம்புவராய மன்னர்களில் சகலபுவனசக்கரவர்த்தி இராச நாராயணசம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. முகப்பு வாயிலின் மேற்புறம் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்பு வாயிலுக்கு எதிரே யம தீர்த்தம் உள்ளது. வாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். இவற்றையடுத்து சுற்றிலும் மதிற்சுவருடனுள்ள ஒரு சிறிய 3 நிலை கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

இத்தல மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நேர்கோட்டில் சுவாமி ,அம்பாள் சந்நிதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள்.

அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் அம்பிகையின் சந்நிதி.இதனை மணக்கோலம் என - அகத்திய மாமுனிவர் தரிசனம் கண்டார்.அருணகிரி நாதரும் வழிபட்டிருக்கின்றனர். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதியும், ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது மற்றோர் சிறப்பு. மகாமண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். லிங்கோத்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் கோஷ்டத்தில் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் உள்ளனர்.

இத்தலத்தில் மகா சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

சிறப்புக்கள் :

வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்

திருவிழா:
மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா

அம்மாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்..

போன்:  -

குருக்கள் 8148799242, 8056208166

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள்  திருவைகாவூர் செல்ல இருக்கின்றன. சுவாமிமலையிலிருந்து நாகுகுடி என்ற ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் நாகுகுடி சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ).
அல்லது
கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம்.திருவைகாவூர் மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம்.

சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் மகா சிவராத்திரி பிறந்தது.

அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சம் அருளிய தலம்.

எல்லாம் அறிந்த மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் திருக்கடவூர். ஏதும் அறியாத வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் திருவைகாவூர்.

இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

அனைத்து நந்திகளும் எதிர் திசையில் நம்மைப் பார்த்து உள்ள ஒரே தலம், இங்குள்ள நந்திகள் அனைத்தும் இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது.