புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்
அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்
வழிபட்டோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், இந்திரன், திருமால், லட்சுமி, சூரியன், காசிபர், கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர், தேவர்கள், அகத்தியர்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர் , அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 11வது தலம்.

இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 74 வது தேவாரத்தலம் ஆகும்.

பித்ருசாப நிவர்த்தி தலம்.

சப்தஸ்தான தலங்களில் இத்தலம் ஆறாவது தலம்.

அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம்.

அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம்.

இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.

இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.


இத்தலத்தில் நந்தி விலகியுள்ளது.அப்பர் உழவாரத்தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்த தலம்.

ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளில் சுமந்த தலம். இவ்விடம் சம்பந்தர்மேடு என்று சொல்லப்படுகிறது. திருவாலம் பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரம்பூரையடுத்து இம் மேடு உள்ளது. அங்கு இருவருக்கும் கோயில் கட்டப்பட்டு, விழா நடைபெறுகிறது.

தல வரலாறு:

காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். காசிபமுனிவரின் கடும் தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது.அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இந்திரன் கவுதமர் சாபத்தால் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்றப் பெற்ற சாபத்தை இத்தலத்தில் பரமனை மலர்களைக்கொண்டு வழிபாடு செய்து நோய் நீங்கி, மலர் போல் தூய நல்லுடல் பெற்றான். தேவர்கள் எல்லோரும் மலர்கொண்டு இறைவனை இத்தலத்தில் வழிபட்டனர். திருமாலும், திருமகளும் இவ்வூர் இறைவனை வழிபட்டனர் என்பதை ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம் காட்டுகின்றது.

பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.  முருகப்பெருமான் இத்தலத்தில்  ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல்  நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் ... மேலும் அவர் பாடிய அங்கமாலை தலையே நீவணங்காய்... என்ற பதிகம் மிக அருமையானது.  எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று மனமுருகி குறிப்பிடுகிறார்.

கோவில் அமைப்பு:

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அப்பரால் மடம் அமைக்கப்பட்ட சிறப்புடையது. இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது.

வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது.

சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், அருகில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியுருடன் சுந்தரர் இருக்கும் உருவங்கள் காணத்தக்கன.

சிறப்புக்கள் :

பித்ரு சாபம் நீங்க அமாவாசையன்று கிரிவலம் வந்து இறைவனைவழிபட்டால் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள சன்னதிகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.

இத் தலத்தில் ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரி பூரணமாய் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

திருவிழா:

சப்த ஸ்தான திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம், திருவாதிரை, மகா சிவராத்திரி, பாரிவேட்டை

போன்:  -

குருக்கள் 9791138256

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

தமிழ் நாடு திருக்கண்டியூரிலிருந்து 3-கி. மீ. தொலைவில், திருக்காட்டுப்பள்ளிச் சாலையில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்தும் செல்லலாம்.


பித்ருசாப நிவர்த்தி தலம்.

அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம். அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம்.

இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.

இத்தலத்தில் நந்தி விலகியுள்ளது.அப்பர் உழவாரத்தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்த தலம்.

ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளில் சுமந்த தலம். இவ்விடம் சம்பந்தர்மேடு என்று சொல்லப்படுகிறது.

இறைவன் இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.