மூலவர் : பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரகன்நாயகி (பெரியநாயகி)
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருத்துறைப்பூண்டி மாவட்டம் : திருவாரூர் .
தல வரலாறு:
இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.
இவ்வுலகில் பிறவி எடுத்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் துன்பம் வருகிறது. இந்த துன்பத்திலிருந்து விடுபட பிறவி மருந்தீஸ்வரரரை வழிபடுவது சிறப்பு. ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள்.அவளுக்கு மனிதனை உண்ணும், விருபாட்சன் என்ற ராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன், அவனை விழுங்க முயன்றான். தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அவ்வுணவே விஷமாகும் என ஜல்லிகை எச்சரித்தாள். கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான்.ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச் செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். இறைவனின் துணைவியான பெரியநாயகி காட்சியளித்தாள்.
அம்மனின் அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன், அவன் வயிற்றில் கிடந்த அந்தணச்சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து, சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும், நற்குணங்களையே கொண்டிருந்தாய். எவள் ஒருத்தி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் பதிசேவை செய்கிறாளோ, அவளது மாங்கல்ய பலத்தை உயர்த்துவதோடு, அவள் நிம்மதியாக வாழவும் வழி செய்வேன். அவளது கணவனை திருத்துவேன், என்றாள். இவ்வாறு இறைவனும், இறைவியும் பிறவி என்ற பெரும்பிணிக்கே மருந்து தருபவர்களாக உள்ளனர்.
சிறப்புக்கள் :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்வினி நட்சத்திர நாளிலோ சென்று வழிபடவேண்டிய திருத்தலம்.
மரகத லிங்கம் அமைந்துள்ளது.
பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.
அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய் கோயிலாகும்.
போன்: +91 4369 222 392, 99442 23644, 98652 79137
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருவாரூரில் இருந்து 30 கி.மீ. தாரத்திலுள்ள திருத்துறைப் பூண்டி நகரின் மையத்தில் கோயில் அமைந்துள்ளது..
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 - 11 மணி, மாலை 4 - இரவு8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved