ஆதிமூலநாதர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : ஆதிமூலேஸ்வரர், திருமூலநாதர், ஆதிமூலநாதர்,
இறைவியார் திருப்பெயர் : மோகநாயகி, மேகலாம்பிகை,
தல மரம் :வில்வம்,
தீர்த்தம் : கொள்ளிடம்,
வழிபட்டோர் : சூரியன், மார்க்கண்டேயர்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:

இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது.

மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி.

தெட்சிணாமூர்த்தி: கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார்.

மார்க்கண்டேய மகரிஷி தமது சிவபூஜைக்குப் பால் கிடைக்காத தால் வருந்தி இறைவனை வேண்ட அவனருளால் பால் பொங்கியதாகவும் அதனால் இத்தலம் திருப்பாற்றுறை எனப் பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்' என்றும், தலம் "பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. வீணை தெட்சிணாமூர்த்தி: கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தெட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்.

கிழக்கு நோக்கிய திசையில் திருக்கோயில் அமைந்துள்ளது. வாயிலில் அமைந்துள்ள மூன்று நிலைக் கோபுரம் நகரத்தார் திருப்பணி. கோபுரத்தின் இடப்புறம் விநாயகர். வலப்புறம் தண்டாயுதபாணி சன்னிதிகள். கோபுரத்திற்கு முன்பாக பலிபீடமும் சிறிய நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. கருவறையை உள்ளடக்கிய விமானம் ஒரு தள வேசர விமானமாகும். ஆதிதளத்திற்கு மேலமைந்த பகுதிகள் அனைத்தும் அண்மைக்கால சுதை மற்றும் வண்ணப்பூச்சுக்கு ஆளாகி நிற்கின்றன. ஆதிதளத்தின் நான்கு மூலைகளிலும் காணப்படும் நந்தி உருவங்கள் பழமையான சிற்பங்களாகும். விமானத்திற்கு முன்பாக அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்பம் ஆகிய மண்டபங்கள் அமைந்துள்ளன.

அர்த்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அர்த்த மண்டப நுழைவாயிலுக்கு மேல் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மகர தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணத்தின் இருபுறங்களிலும் வாய் பிளந்துள்ள மகரங்களினின்றும் பூதங்கள் வெளிப்படுகின்றன. தோரணத்தின் மையப்பகுதியில் ஆலிலையின் மீது படுத்திருக்கும் குழந்தைக் கண்ணனின் திருவுருவம் காணப்படுகிறது. கண்ணனின் இடது கை மேலெழும்பியுள்ளது. மார்பின் குறுக்கே ஸ்வர்ண வைகாக்ஷம் அணிசெய்கிறது.கண்ணனின் இரு புறங்களிலும் சாமரங்களும் தலைக்கு மேல் குடையும் காட்டப்பட்டுள்ளன. வழக்கமாக கண்ட அல்லது வேதி பாதங்களில் குறுஞ்சிற்ப வடிவில் இடம்பெறும் கண்ணனை இங்கு மகரதோரணத்தில் வடித்திருப்பது சிறப்புக்குரியது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள முக மண்டபத்தில் தேவார நால்வர், பாமா ருக்மிணியுடன் வேணுகோபாலர், அதிகார நந்தி, சுயசாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் மற்றும் வணங்கிய திருக்கரங்களுடன் காணப்படும் அரசர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

திருப்பாற்றுறை திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலிலிருந்து படியெடுக்கப் பட்டுள்ளன. பல்லவ மன்னனான மூன்றாம் ந ந்திவர்மன் (846-869), முதலாம் பராந்தக சோழன் (907-955), கண்டராதித்த சோழன் (950-957), இரண்டாம் பராந்தகனான சுந்தரச் சோழன் (957 - 975), உத்தமச் சோழன் (971 - 987), முதலாம் இராஜராஜ சோழன் (985-1012), முதலாம் குலோத்துங்க சோழன்(1070-1120), விக்கிரம சோழன் (1118-1136), போசள மன்ன ன் வீர இராமனாதன் ஆகிய மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இவற்றுள் அடக்கம். முதலாம் பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்கள் சில உத்தமச் சோழன் காலத்தில் மீள்பொறிப்புக்கு ஆளாகியுள்ளன.

விக்கிரமச் சோழனது கல்வெட்டுக்கள் இக்கோயிலில் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்கோயிலில் நந்தா விளக்கெரிக்க 15 பசுக்கள் அளித்த செய்தியும் திருவெறும்பூரை அடுத்துள்ள சோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இக்கோயிலில் விளக்கெரிக்க தானம் அளித்த செய்திகளையும் இம்மன்னன் காலக் கல்வெட்டுக்கள் எடுத்து இயம்புகின்றன. மேலும் இக்கோயிலின் அருகே காக்கு நாயக்கன் மடம், திருநாவுக்கரசு தேவன் மடம் என்கிற மடங்கள் செயல்பட்டதையும் அங்கு மாகேசுவர ர்ரகளுக்கு உணவு அளிக்கப்பட்டதையும் திருவானைக்கா திருக்கோயில் மடங்கள் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பல்லவர் காலம் முதல் வழிபாட்டில் இருந்து சோழர் காலம் முழுவதும் சிறப்புற்று விளங்கிய இத்திருக்கோயில், காவிரிப் படுகையில் அமைந்துள்ள சோழர் கற்றளிகளில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் விளங்கி வருவதை அறியலாம்.


போன்:  +91- 431 - 246 0455.

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மி. நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பாதை சற்று கடினமானது. மிகச் சிறிய ஊர். பனையபுரத்தில் ஆட்டோ வசதிகள் இல்லை. ஆகையால் திருச்சியில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது நல்லது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இத்தலத்தில் அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள்.

மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி.

மார்க்கண்டேய மகரிஷி தமது சிவபூஜைக்குப் பால் கிடைக்காத தால் வருந்தி இறைவனை வேண்ட அவனருளால் பால் பொங்கியதாகவும் அதனால் இத்தலம் திருப்பாற்றுறை எனப் பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்' என்றும், தலம் "பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.