சூரியனார் கோவில் - தல வரலாறு - பாடல் பெற்ற தலம் இல்லை

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும். இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க...இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார்.

தல வரலாறு:

இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது.

இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது. இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன. கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர். மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும் நன்று.

இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பீடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும் காட்சியளித்தனர். காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது தேவர்களும் வரமளித்து மறைந்தனர்.

படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது தேவர்களையும் அழைத்து "உயிர்களாய்ப் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்" என்று சாபம் கொடுத்தார். அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர். "உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் தொலைந்துவிட்டது. இன்று முதல் இந்த இடம் உங்களுடையதே. துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்" என்று வரம் தந்தனர்.

சிவன் தனது கையிலிருந்த திரிசூலத்தைக் கொண்டு ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார். அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். சூரியன் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும். மேலும், சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார்.
சிறப்புக்கள் :

புத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத் தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.

எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.
போன்:  +91- 435- 2472349

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு இக்கோவில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் தஞ்சாவூரில் இருந்து 58 கி.மீ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் - ஆடுதுறை 2 கி.மீ தொலைவில். அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 123 கி.மீ தொலைவில்.

இவ்வாலயம் காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை. திறந்திருக்கும்.இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார்.

எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.