மூலவர் : ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்
அம்மன்/தாயார் : தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி
வழிபட்டோர் : திருமால், அப்பர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சூரியபகவான், திருநாவுக்கரசர்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,சுந்தரர்
இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும்.
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற சிவஸ்தலங்கள் திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் மற்றும் திருவாஞ்சியம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மண் லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறப்பா’ என்று சொன்னால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.
சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்.
சிவனுக்கு, இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது.
காவிரியாறு, சூரிய புஷ்கரணி, சமுத்திர தீர்த்தம், தேவாமிர்த தீர்த்தம், பிந்தி தீர்த்தம் எனப் பல தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் காவிரியில் மூழ்கினால் மற்ற தலங்களில் துலாமாதம் முழுதும் மூழ்கிய பலன் உண்டு.
காவிரிக்கரையின் அருகே மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா கண்கொள்ளாக் காட்சி.
காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஐந்து நதிகள் பாய்வதால் ஐயாறு, திருவையாறு, பஞ்சநதி என்பது தலத்தின் பெயராக உள்ளது.
தல வரலாறு:
நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.
திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு மானசரோவர் குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரிடம் கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை அசரீரியாக அழைத்த சிவபெருமான் இந்த மானசரோவர் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் மானசரோவர் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். சிவபெருமான், அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார்.
இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது.
தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு:
சோழர்காலக் கல்வெட்டுக்கள் இவ்வாலயத்தில் மிகுதியாக உள்ளன. இத்தலத்துச் சிற்பங்கள் பழமையானவை. இக்கோயில் சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவீதிகள் உள்ளிட்டு 5 பிரகாரங்கள் கொண்டது.
சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. அந்தத் திருச்சுற்றிலேயே உமாமகேஸ்வரர், சங்கர நாராயணர், பரிவார மூர்த்தங்கள், பிரம்ம தேவர், திரிபுரசுந்தரி எழுந்தருளியுள்ளனர். இரண்டாம் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் ஆலயம், அருகில் ஜப்பேசுர மண்டபம் உள்ளது. அதில் பஞ்சபூத லிங்கங்கள், சப்த மாதாக்கள், ஆதிவிநாயகர், நவகிரகங்கள் எழுந்தருளியுள்ளனர்.
கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. பூலோக கைலாயமாகிய இங்கு தெற்கு கோபுரவாயில் வழியாக இறைவன் திருவிழாவின் போது வீதி உலா வருவார். நான்காம் திருச்சுற்றில் சூரிய புஷ்கரணி குளம், அப்பர் கயிலையைக் கண்டு தரிசித்த தென்கயிலாயமும், வடகயிலாயம் என்னும் ஓலோக மாதேவிச்சுரமும் உள்ளன. தென்கோபுர வாயிலில் ஆட்கொண்டார் சன்னதி உள்ளது. ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் திருக்கோலத்தில் உள்ளார். இங்கு குங்கிலியமிட்டு வழிபாடு செய்கின்றனர். குங்கிலியப் புகை பரவும் எல்லைவரை விஷம், எமபயம் ஏதுமில்லை என்பது நம்பிக்கை. ஆட்கொண்டேசரே மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு
ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி: சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி' என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது.
நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார். தட்சிணமாமூர்த்தி மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.
இறைவி நின்ற திருக்கோலம். மேல்கரங்களில் சங்கு சக்கரத்துடன், இடக்கரத்தை இடுப்பில் ஊன்றி விஷ்ணுரூபமாகக் காட்சி தருகிறாள். காஞ்சி காமாட்சி போன்று இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்தமையால் அறம்வளர்த்த நாயகி என்றும் தர்மசம்வர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள், இவ்வாலயத்தில் பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
இங்குள்ள தியான முக்தி மண்டபத்தில் நந்தி தேவர், விஷ்ணு, அகத்திய முனி ஆகியோர் உபதேசம் பெற்றனர்.சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது.இந்த மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்தால் அது லட்சம் மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை. இங்குஅமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது.
350 ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் காலத்தில் செய்யப்பட்ட தேர் சேதமடைந்துவிட்டதால், புதிய தேர் செய்யும் பணி சூன் 2017இல் தொடங்கப்பட்டது. 5 படி நிலைகளில் 18 முக்கால் அடி உயரத்தில் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. 60 டன் இலுப்பை மரங்கள், 2 டன் தேக்கு மரங்கள், 2 1/2 டன் இரும்புபொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இத்தேரில் விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், சண்டிகேசுவரர், 63 நாயன்மார்கள், நான்கு ஆழ்வார்கள், அப்பர் திருக்கயிலாயக் காட்சி, தசாவதாரக்காட்சி, சப்தஸ்தான திருவிழா காட்சி, மீனாட்சி திருக்கல்யாணக்காட்சி, சிவபுராணக்காட்சி உள்ளிட்ட 750 சிற்பங்கள் உள்ளன.
சிறப்புக்கள் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
திருவிழா:
மகா சிவராத்திரி
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதப் பௌர்ணமி விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இறைவன், இறைவியுடன் ஏழூ ஊர்களுக்கு வலம் வருவார்.
போன்: -
94430 08104
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
© 2017 easanaithedi.in. All rights reserved