இறைவர் திருப்பெயர் : மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர், கரிநாலேஸ்வரர், நாட்டியத்து நம்பி.
இறைவியார் திருப்பெயர் : மங்களாம்பிகை.
தல மரம் : மாவிலங்கை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், கரி தீர்த்தம்.
வழிபட்டோர் : யானை, கோட்புலி நாயனார், சுந்தரர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - பூணாண் ஆவதோர் அரவங்கண்்.
தல வரலாறு:
தலச் சிறப்பு: 63 நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம் என்ற பெருமையை உடையது இத்தலம். கோட்புலி நாயனார் சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்து உபயோகப்படுத்துவதில் மிகவும கட்டுப்பாடுடன் இருந்தார். ஒருமுறை யுத்தம் வந்தபோது அவரும் போருக்குச் சென்றிருந்தார்.அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய கோட்புலி நாயனாரின் குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார், இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும், சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் உமா தேவியோடு சிவபெருமான் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் ஆட்கொண்டார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு வருகை தந்த போது கோட்புலி நாயனாரின் வீட்டில் தங்கி இருந்தார். அச்சமயம் இறைவனை வழிபட இருவரும் ஆலயத்திற்குச் சென்றனர். ஆலயத்தில் இறைவனையும் இறைவியையும் காணாது சுந்தரர் திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். (கிழக்கு கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது) அவ்வழியே சுந்தரர் சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர், நடவு நட்டது போதும் வாரும் என்று அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர். சுந்தரர் அவர்களைப் பின் தொடர்ந்து கோவிலுக்குள் செல்லும் போது, ஒரு பாம்பு வாயிலில் தடுக்க அப்போது பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார் என்று தலவரலாறு சொல்லப்படுகிறது. மேலும் கோட்புலி நாயனார் அவருடைய இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை ஆகியோரை சுந்தருக்கு பணிப்பெண்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, சுந்தரர் அந்த இருவரையும் தம் புதல்வியர்களாக ஏற்றருளிய பதி இதுவாகும்.
இரத்தினேந்திர சோழனும், அவனது தம்பியும் தம் தந்தையார் அவர்களுக்கு விட்டுச் சென்ற இரத்தினங்களை மதிப்பீடு செய்து தமக்குள் பிரித்துக் கொள்வதற்கு இரத்தின வியாபாரி ஒருவரை அழைந்நனர். இருவரும் இரத்தின வியாபாரி செய்த மதிப்பீடு சரியில்லை என்று எண்ணி இறைவனிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே ரத்தின வியாபாரியாக வந்து ரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீசுவரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தம் ஒன்று உருவாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது. யானை உண்டாக்கிய தீர்த்தம் கரி தீர்த்தம் எனப்படுகிறது. கரிக்கு (யானைக்கு) அருள் செய்ததால் இறைவனுக்கு கரிநாதேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இத்தலத்தின் மற்றொரு தீர்த்தம் சூரிய தீர்த்தம். சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
சிறப்புக்கள் :
கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம்.
கோட்புலி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
கோட்புலி நாயனாரின் இரு பதல்வியர்களான - சிங்கடி, வனப்பகை ஆகியோரை சுந்தரர் தம் புதல்வியர்களாக ஏற்றருளிய பதி.
கிழக்கு கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் உள்ளார்.
போன்: +91- 4367 - 237 707, 94438 06496.
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது..
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved