திருகுரங்கனில் முட்டம் வாலீஸ்வரர் கோயில் - காஞ்சிபுரம் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்
இறைவியார் திருப்பெயர் : இறையார் வளையம்மை
தல மரம் : இலந்தை
தீர்த்தம் : காக்கைமடு தீர்த்தம், வாயசை தீர்த்தம்
வழிபட்டோர் :திருஞானசம்பந்தர், வாலி, இந்திரன் , எமன்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர் - விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்...

தல வரலாறு:
இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால் இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது.குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு "கொய்யா மலர் நாதர்' (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு. இவருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.

16வது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.  அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். சிவன் , பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், "தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்' கூறினார். இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான்.


இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் "குரங்கு அணில் முட்டம்' என்றானது.

உள்பிராகாரத்தில் விநாயகர்,சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.


கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. இங்குள்ள அம்பாள் பெயர் "இறையார்வளையம்மை'. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாளாம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம். அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர்.


சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.

சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார்.

முக்தி தலம்:

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, "குரங்கணின்முட்டம்' என்றும், "பறவா வகை வீடு' (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.


இக்கோவிலுக்கு வடக்கே சுமார் அரை கி.மி. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.

சிறப்புக்கள் :

இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.

வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றது.


போன்:  99432 95467,+91 94456 42409, 98946 99095,
                  72999 04344

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

இத்திருத்தலம் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மி. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மி. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது.


முக்தி தலம் இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார்.