இறைவர் திருப்பெயர் : பாதாளேசுவரர், பாதாள வரதர்
இறைவியார் திருப்பெயர் : அலங்கார நாயகி,
தல மரம் : வன்னி,
தீர்த்தம் : பிரமதீர்த்தம்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்.
தல வரலாறு:
‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும் தலம்.
சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது.
பூமியில் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடவுளான நாராயணனுக்கு திடீரென்று சிவனின் பாதத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஓர் ஆசை உதித்தது. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. சிவபெருமானும் அதற்கு இசைவு தெரிவிக்க, பூமிக்கடியில் இருக்கும் அவரது பாதத்தைக் காண வராக அவதாரம் எடுத்தார். தனது முகத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி, அவ்வழியே உள்ளே சென்றார். ஆனால் பாதத்தைத் தான் காண முடியவில்லை. சற்றே விரக்தி தோன்றியதால், பூமியின் மேலே வந்தார். அங்கே நாராயணன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். நாராயணன் அன்று ஏற்படுத்திய துவாரம் தென்தமிழகத்தில் உள்ள அரித்துவாரமங்கலத்தில் உள்ளதாகத் தல புராணம் கூறுகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது.
திருமால் பன்றி உருவங் கொண்டு பூமியைப் பள்ளம் (துவாரம்) செய்த தலமாதலால் அரித்துவாரமங்கலம் என்று பெயர் பெற்றது[1] இன்றளவும் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. இக் கோயிலில் நவக் கிரகங்கள் கிடையாது.
அரித்துவாரமங்கலம் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. ஹரியாகிய நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துவாரம் போட்டதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது. மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஸ்ரீ அலங்கார வள்ளி என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்
1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.
சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.
போன்: + 91-4374-264 586, 4374-275 441, 94421 75441.
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved