குறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை - தல வரலாறு
பாடல் பெற்ற தலம் இல்லை

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் .
இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி .

இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.


தல வரலாறு:

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் சரபேஸ்வரர்.

சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.

குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் – குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்….  மக்கள் என்ன நினைக்கிறார்கள்”  என்று கேட்டார்  ராமர்.

 ‘சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.  அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர்  சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார்.

அன்று சீதை காட்டில்  விடப்பட்டார்.  அந்த காட்டில்  வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார்.  சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார்.  சீதையின் புதல்வர்களான லவன் – குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் – குசனும் தடுத்து நிறுத்தினர்.

‘இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ’அட அப்படியா? என்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு,  குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர்.  அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.

ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர்  அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர்  காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக் கிறது.

சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.  இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள். கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.


சிறப்புக்கள் :

வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.

அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம்.

இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.

இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம்.


போன்:  +91-44 - 2479 6237

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.

காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.