இறைவர் திருப்பெயர் : வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை
தல மரம் : கல்பனை (பனை மரத்தில் ஒருவகை - தற்போதில்லை.)
தீர்த்தம் : சிவகங்கை. வழிபட்டோர் : இடும்பன்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - மாதினையோர் கூறுகந்தாய்.
தல வரலாறு:
இங்கு மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நடுதறிநாதர் திருமுடியில் கோடரியின் வெட்டுக்காயம் இன்றும் உள்ளதைக் காணலாம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 184 வது தேவாரத்தலம் ஆகும்.
(கன்று - பசுங்கன்று. ஆப்பு - அக்கன்றைக் கட்டும் சிறு முளை, நடுதறி - நடப்பட்ட தறி. தறி - முளை)
ஒரு காலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னம் வித்யாதரப் பெண் உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக்கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, ""நீ மண்ணுலகத்தில் பிறக்க' எனச் சபித்தார். பின் நிகழ்ச்சி அறியாது நடித்த சுதாவல்லி கண்கலங்கினாள். என்ன செய்வேன் என பதறினாள். அப்பொழுது இறைவி, ""நீ மண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய்' எனக்கூறி அருள்பாலித்தாள்.
அப்படியே சுதாவல்லி தென்தமிழ் நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப் பெற்று பிறந்து கமலவல்லி என்னும் திருப்பெயருடன் வளர்ந்துவந்தாள். இடையறாது சிவபெருமானை சிந்தித்து வந்தாள். கமலவல்லி சைவ நெறியில் வளர்ந்து வந்தாள். பழவினைத் தொடர்பால் சிவபூசனை செய்துவந்தாள். திருமுண பருவத்தை அடைந்தாள்.
பெற்றோர் கோத்ரம் - குலம் பார்த்து தக்கவன் என்று கருதிய ஒருவனுக்கு கமலவல்லியை மணம் செய்வித்தனர். அந்த ஊரிலேயே தனி மாடம் மருங்கமைத்து பெற்றோர் இல்லறத்தை நடத்தச் செய்தனர். கமலவல்லி காரைக்கால் அம்மையாரைப் போன்று இவ்விறைவனுக்கு இனியளாய் நடந்துவந்தாள். எனினும் உயிரிறைவனாகிய சிவபெருமானிடத்து பேரன்பு பூண்டு, தக்க அறங்ளை செய்து வாழ்ந்துவந்தாள்.
சிவனை இடைவிடாது பூஜை செய்தாள். கணவன் கமலவல்லியின் உயர்வை உணராமல் அவள் சிவனை பூஜிப்பதில் வெறுப்புகொண்டு சிவலிங்கத்தை ஒரு கிணற்றில் எறிந்துவிட்டான். கமலவல்லி இதை உணர்ந்து, இல் இறைவனுக்கு மாறாக சிவனை பூஜிப்பதா அல்லது சிவபூஜையை விடுவதா என சிந்தித்தாள்.
கணவன் அறியாதவாறு சிவபூஜை செய்வது என்ற முடிவிற்கு வந்தாள். தன் வீட்டு பசுங்கன்று கட்டும் தறி ஒன்றை சிவலிங்கமாக பாவித்து பூஜை செய்துவந்தாள். இப்படி இவள் தன் கருத்துக்கு மாறாக நடக்கிறாள் என்பதை அறிந்த கணவன் சினம்கொண்டு, அக்கன்று கட்டும் தறியை கோடறி கொண்டு தாக்கினான். உதிரம் வெளிப்பட்டது. கமலவல்லியின் பக்தியை உலகவரும் அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார்.
கமலவல்லியும், கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுதறிநாதர் எனப்பட்டார்.
அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுதறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடறி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறி நாதரை வழிபட்டு அருள்பெற்றான்.
கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய இக்கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வாலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம், நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறு, விநாயகர், அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்து சம்பந்தர், அப்பர் இருவரும் காட்சி தருகின்றனர்.
பிரகாரம் வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் நடுத்தறியப்பர் தரிசனம் தருகிறார். மூலவர் சதுரபீடம் ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
சிறப்புக்கள் :
கண் நோய் நீங்க ஞானகுப தீர்த்தத்தில் நீராடியும், குழந்தைப்பேறு, புகழ் பெற இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
இங்குள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும், இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர். (மற்றிருவர் இல்லை)
மூலவர் - பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளது; சதுர பீடம்.
இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம்.
போன்: +91 -4365 - 204 144, 94424 59978
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
(1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 கி. மீ. சென்று, ஆதமங்கலம் தாண்டி, "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தில் வலப்புறமாக பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம்.
(2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாக) பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். (கீழ கண்ணாப்பூர் என்று ஊர் ஒன்றுள்ளது; தலம் அதுவன்று. எனவே, "கோயில் கண்ணாப்பூர் " என்று கேட்க வேண்டும்.)
(கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. பாடல் பெற்ற தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று கேட்க வேண்டும்). திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved