மூலவர் : சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)
அம்மன்/தாயார் : பிரஹந்நாயகி, பெரியநாயகி
தல விருட்சம் : பனைமரம்
தீர்த்தம் : பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர் : சுந்தரர், கரிகாலச் சோழன், சப்தரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி,
தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.
இத்தலத்தில் சுந்தரருக்கு சிவபெருமான் நடனக் காட்சியருளினார் என்பது தொன்நம்பிக்கை.
தந்தை இளஞ்சேட் சென்னியை இழந்த கரிகாலன் தாயத்தார் எதிரிகளுக்குப் பயந்து இரும்பிடர்தலையார் என்ற புலவரின் உதவியோடு தங்கிய தலம்.
தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன.
தல வரலாறு:
பழமையான கோயில், சிறிய ஊர். கரிகாற் சோழன் வளர்ந்த ஊர், முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார்.தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய "இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தார் கரிகாலச் சோழன். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் "துணையிருந்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார்.
பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன. தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன. பனைமரங்களை மிகுதியாக உடைய ஊரானதால் தாலவனம் என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. தாலம் என்பது பனை மரத்தைக் குறிக்கும்.
சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுக்கோளின்படி, திருப்புகலூர் சிவபெருமான் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து" என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் வரலானார். அப்போது ஊரின் எல்லையில் சிவபெருமான் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அரள் பெற்றார். இந்நகிழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம்' என்னும் பெயருடன் திகழ்கின்றது. சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் இதன் நினைவாக, இங்கு உள்ள விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு:
இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் ""இராசேந்திர சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது. கல்வெட்டில் இறைவன் திருப்யெர் 'பனையடியப்பன்' பனங்காட்டிறைவன்' என்று குறிக்கப்பெறுகின்றது.
கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது சதுர ஆவுடையார் சிவபெருமான் ,இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை நடராஜர் சந்நிதி உள்ளன.
வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளதுபிரகாரத்தில் பராசர முனிவர் உருவம் உள்ளது , விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது- இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.
சிறப்புக்கள் :
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.
திருவிழா:
சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.
போன்: -
குருக்கள் 9942281758
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர். நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். பேரளம் - திருவாரூர் பேருந்து சாலை வழியில் சன்னாநல்லூரைக் கடந்து மேலும் சென்றால் "பனையூர்" என்று கைகாட்டி உள்ளது. குறுகலான அக்கிளைப் பாதையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
© 2017 easanaithedi.in. All rights reserved