இறைவர் திருப்பெயர் :உஜ்ஜீவனேஸ்வரர், உஜ்ஜீவ நாதர்
இறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, பாலாம்பிகை
தல மரம் : - வில்வம்
தீர்த்தம் : - பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள்
வழிபட்டோர் : மார்க்கண்டேயன், அருணகிரிநாதர், இராவணனுடைய சகோதரன் கரன்
தேவாரப் பாடல்கள் :-திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்
மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார்.
இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், "திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!' என வேண்டிப் பாடியுள்ளார்.
இங்குள்ள நடராஜர் சிலை பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.
50 அடி உயர மலைக்கோயில் - ஓம் வடிவில் அமைந்துள்ளது.
பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது.
இத்தலத்தில் வசிப்போர் நீண்ட ஆயுளையும், நிறைந்த செலவங்களையும் பெறுவர். வழிபடுவோர்க்கு எம பயமில்லை என்று தலபுராணம் கூறுகிறது.
தல வரலாறு:
சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 67 வது தேவாரத்தலம் ஆகும்.
மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி "உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா" என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.
மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்' என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது
இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை "மூதேவி' என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள்.இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள்.
ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை "மாடன்' என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள்.
கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண கிணறு, நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
கோவில் அமைப்பு:
50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு எதிரே ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன.
குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். படிகள் செல்லும்போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது.
கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காப்பதற்காக, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகளேறி உட்சென்றால் முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்து போய் உள்ளது. எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால் புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது. அம்பிகை சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.
உள் நுழைந்ததும் நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. இறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவி்லுக்கு பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக்கள் :
குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க பாலாம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
போன்: - 94431 50332, 94436 50493
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது.
© 2017 easanaithedi.in. All rights reserved