மூலவர் : திருப்பயற்றுநாதர் (முத்கபுரீஸ்வரர்), முக்திபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : காவியங்கண்ணி (நேத்ராம்பாள்), நேத்ராம்பிகை
தல விருட்சம் : சிலந்திமரம்
தீர்த்தம் : கருணாதீர்த்தம்
வழிபட்டோர் : பைரவ மகரிஷி, வணிகர்
தேவாரப் பாடல்கள் :- அப்பர்
"மூவகை மூவர்போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர் நாவகை நாவர்போலும் நான்மறை ஞானம் எல்லாம் ஆவகை யாவர்போலும் ஆதிரை நாளர்போலும் தேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூரனாரே."
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 78வது தலம்.
இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 141 வது தேவாரத்தலம் ஆகும்.
எல்லா தேவ சக்திகளின் ஒரே இருப்பிடம் இந்த திருப்பயற்றுநாதர்.
கல்வியில் சிறப்புறத் தேற விரும்புவோரும், மறதி தொல்லையிலிருந்து விடுதலை வேண்டுவோரும் அண்டித் தொழவேண்டிய மூர்த்தி, திருப்பயற்றுநாதர்.
இவர், முக்தி தரும் ஈசன் என்பதினால் பொய்யாமொழி சித்தர், ‘‘பற்றிருறை முத்கபுரீசா” என்று விளம்ப, இவருக்கு அருள்மிகு முத்கபுரீஸ்வரர் என்பதாக பெயர் தோன்றிற்று.
தல வரலாறு:
முன்னைய காலத்தில் இத்திருத்தலத்தில் ஏற்றுமதி இறக்குமதி வாணிபம் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு மிளகு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும். பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை வணிகர் ஒருவர், குருமிளகு மூட்டைகளை ஏற்றி வந்தார். மிளகு மூட்டைகளுக்கு சுங்கவரி கட்டினால் வணிகருக்கு வருமானம் ஏதும் கிடைக்காது. இதை உணர்ந்த வணிகர் மிகவும் வருந்தினார். பயறுக்கு வரிவிலக்கு உண்டு. எனவே வணிகன் முத்கபுரீஸ்வரனை வேண்டி வணிகர் இத்தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார்.
சிவ பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி மறுநாள் காலை வணிகர் எழுந்து பார்த்த போது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார். அதிகாரிகள் முன்னிலையில் மூட்டைகளை நிறுத்தினார். அதிகாரிகள் மூட்டைகளை சோதிக்க அவற்றில் பயறுகளே நிறைந்திருக்க, வணிகனை வரிவிதிப்பு ஏதுமின்றி விடுவித்தனர். எல்லை தாண்டியதும் பயறுகள் முன்போல் மிளகு மூட்டைகளாக மாறி அதிசயம் செய்தன. இதனைக் கண்ட வணிகர் ‘‘திருப்பயற்று நாதா” என மனமுருகி கூவ, அதுவே அத்தருணம் தொட்டு இறைவனுக்கு பெயராய் அமைந்தது. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்" எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது.
இத்தல கல்வெட்டு ஒன்றின்படி திருப்பயற்றூரில் வாழ்ந்து வந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால் வருந்திய போது, அவன் கண் நன்றாகும்படி இத்தல இறைவனை வேண்டிக் கொண்டு, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால் யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது.
கோவில் அமைப்பு:
இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சோழர்கள் அமைத்த இவ்வாலயம் கிழக்கு நோக்கி நான்கு புறமும் மதில்சுவருடன் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேற்புறம் சுதையால் ஆன சிற்பங்கள் நம்மை கவர்கின்றன. ஆவுடையார் நாற்கோண வடிவம் - பழமையான திருமேனி.
தலமரமாகிய சிலந்தி மரம் - இம்மரத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தி பூச்சி வடிவில் இருக்கும். சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு; இலை, புன்னையிலைபோல இருக்கும். எப்படிப்பட்ட கண் திருஷ்டி குடும்பத்திற்கு இருந்தாலும் இத்தல விருட்சத்தை தொழ, அவையெல்லாம் விலகும் என்பது சித்தர் காட்டும் நெறி.
கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் சித்திவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு துர்க்கை கிடையாது.
வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது நம்பிக்கை. இத்தலவிநாயகர் சித்திபுத்தி விநாயகர் எனப்படுகிறார்.
கார்த்திகைச் சோமவார நாட்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்திலுள்ள பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதி மிகவும் சிறப்பாகவுள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
சிறப்புக்கள் :
இப்பகுதி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க திருப்பயற்றுநாதரையும்,
கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மன் காவியங்கண்ணியையும் கருணா தீர்த்தத்தில் நீராடி வழிபடுகின்றனர்.
மகாலட்சுமியையும், கஜலட்சுமியையும் இத்திருத்தலத்தில் வெள்ளிக்கிழமையில் ஆராதிக்க குறைவற்ற சம்பத்துக்கள் கூடி இன்பமூட்டும்.
திருவிழா:
சித்ரா பவுர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, மகா சிவராத்திரி.
போன்: -
9789397028 , 98658 44677
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது
© 2017 easanaithedi.in. All rights reserved