ஆம்ரவனேஸ்வரர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்,
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை,
தல மரம் :மாமரம்,
தீர்த்தம் : காவேரி, காயத்ரி தீர்த்தம்,
வழிபட்டோர் : சூரியன், சந்திரன், இந்திரன், மருதவானவர், மிருகண்டு முனிவர் ,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர், அருணகிரியார்,

தல வரலாறு:

இது அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்கள் ஆகியோரால் பாடப் பெற்ற திருவிடமாகும்.

ஆதிசங்கரர் இத்தல மூர்த்தியை வழிபாடு செய்துள்ளது மேலும் ஒரு சிறப்பு.

சூரியனது வெப்பக் கீற்றைப் பொறுத்து தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை வேண்டி சமுக்யா தேவி வழிபட்ட தலம்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த திருத்தலம்.

சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர, வந்து வழிபட்ட திருத்தலம் இந்த மாந்துறை.

திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட திருத்தலம்.

முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆதி காலத்தில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய விஸ்வகர்மாவின் மகளாகப் பிறந்தார் சமுக்யாதேவி. பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்கிய சமுக்யாதேவியை சூரிய பகவான், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர், தேவர்கள் என எல்லோரது ஆசியுடனும் வாழ்த்துக்களுடனும் திருமணம் புரிந்து கொண்டார். தம்பதியர் இருவரும் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சமுக்யாதேவிக்கு கதிரவனின் வெப்ப உக்கிரத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சூரிய பகவானிடம் அவரது வெப்ப மிகுதியை தனித்துக் கொள்ளச் சொன்னாள் சமுக்யாதேவி. அவ்வாறு சூரியனிடம் வேண்டிக்கொண்டும் அவர் தனது வெப்பக் கதிரின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இனி இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலையில், தனது தந்தையான விஸ்வகர்மாவிடமே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தாள் சமுக்யா. அதனை தன் தகப்பனாரிடம் கூற, அவரோ ஆறுதல் கூறி அவளை கணவனிடமே சேர்ந்து வாழ வலியுறுத்தினார். பொறுக்க முடியாத சமுக்யா கணவனை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தன்னைப் பிரிய தன் கணவர் ஒப்புக் கொள்ளமாட்டார், மேலும் மனம் வருந்துவார் என்றெண்ணிய சமுக்யா தன்னைப் போலவே துளியும் வித்தியாசம் காணமுடியா வண்ணம் ஒரு உருவத்தை தனது நிழலில் இருந்து உருவாக்கினாள். அந்த உருவத்திற்கு சாயாதேவி எனப் பெயரிட்டு, தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக வாழ்ந்து அவருக்கு உதவியாக இருக்கும்படி பணித்தாள். அதன் பின் தன் தகப்பனிடமே வந்து சேர்ந்த சமுக்யா, தந்தை விஸ்வகர்மா எத்தனை சொல்லியும் திரும்பவும் கணவனிடம் செல்லவில்லை. இவ்வாறு தான் கணவனைப் பிரிந்து வந்து இங்கு வசிப்பதை விரும்பிடாத தன் தந்தையால் மனம் வெதும்பிய சமுக்யா, குதிரை வடிவம் பெற்று இந்த மாந்துறை தலம் வந்து இத்தல இறைவனை வணங்கி, தனது கணவரின் உக்கிரம் குறையவும், சூரியனது உக்கிரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை தனக்கு அருளுமாரும் வேண்டினாள்.

இதற்கு நடுவே தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பது சமுக்யாதேவி இல்லை என்பதை உணர்ந்த சூரிய பகவான், விஸ்வகர்மாவின் மூலம் சமுக்யாதேவியின் பிரிவை அறிந்த கதிரவன், அவரின் முன்பாகவே தனது உக்கிரத்தைக் குறைத்துக் காண்பித்தார். பின்னர், இந்த மாந்துறை திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு சமுக்யா தேவியுடன் சேர்ந்தார். இதன் காரணமாகவே இத்திருத்தலத்தில் நவக்ரஹங்களில் உள்ள சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயதேவியுடன் தம்பதி சமேதராய் காட்சி தருகிறார். மேலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறும் அமைந்துள்ளன.

கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.


போன்:  +91-99427 40062, 94866 40260

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடி அடைவதற்கு முன்னால் 3 கி.மி. தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மி தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட திருத்தலம்.

சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர, வந்து வழிபட்ட திருத்தலம் இந்த மாந்துறை.

சைவ சமய நால்வருள் திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பட்ட திருத்தலம். இத்தல முருகன் மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி அருளியுள்ளார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.