தாளபுரீஸ்வரர் கோயில் திருப்பனங்காடு - காஞ்சிபுரம் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : பனங்காட்டு ஈஸ்வரர், தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அமிர்தவல்லி, கிருபாநாயகி
தல மரம் : பனை
தீர்த்தம் : ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம்
வழிபட்டோர் :சுந்தரர், அகத்தியர்,புலத்தியர்
தேவாரப் பாடல்கள் :சுந்தரர்- விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை...

தல வரலாறு:
திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( தற்போது திருப்பனங்காடு என்று வழங்குகிறது )

இரண்டு மூலவர்கள் : தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர்

இரண்டு அம்பாள் சந்நிதி,
இரண்டு கொடிமரம்,
இரண்டு நந்தி
இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது.

அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.

அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.

சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும், அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் அவரை மறைத்து பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர், உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா? என்றார். அம்முதியவர் "உங்களுக்கு நீர் கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது.


வியந்த சுந்தரர் முதியவரிடம், தாங்கள் யார்? என்றார். அதற்கு முதியவர், "உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி "வம்பு செய்பவன், கள்ளன்' என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தத்தை "சுந்தரர் தீர்த்தம்' என்கின்றனர்.

கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும், சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது.

கிருபாபுரீஸ்வரர் கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, இடது புறத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். ஒரு பள்ளியறை மட்டும் இருக்கிறது. இருவருக்கும் அம்பாள்கள் தனித்தனி சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அடுத்தடுத்து இருக்கின்றனர். இதில் பிரதான அம்பாள் அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர்.

பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு இடப்புறத்தில் நாகதேவதையும், வலப்புறத்தில் மடியில் அம்பாளை வைத்தபடி மற்றோர் விநாயகரும் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியே வன்னி மரத்தின் அடியில் சனீஸ்வரர் இருக்கிறார். இவரை வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இவருக்கு அருகிலேயே வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த யோகனந்த முனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சிவன் கோயிலுக்குள் செல்லும் முன்பு முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள்.

மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில: அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது.உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.


சிறப்புக்கள் :

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும், கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது.

வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த யோகனந்த முனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சிவன் கோயிலுக்குள் செல்லும் முன்பு முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள்.போன்:   +91- 44 2431 2807, 98435 68742

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

இத்திருத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மி. வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மி. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும். சற்றே கடந்து செல்ல ஆலயம் வரும்.


இரண்டு மூலவர்கள் : தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர்

இரண்டு அம்பாள் சந்நிதி,இரண்டு கொடிமரம்,இரண்டு நந்தி

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.