இராமநாதசுவாமி திருக்கோவில் - இராமேஸ்வரம் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தல மரம் : - பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது, வில்வம்
தீர்த்தம் : - கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.)
வழிபட்டோர் : ராமர், பதஞ்சலி முனிவர், அம்பாள் பக்தரான ராயர், ஆதிசங்கரர், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன், விவேகானந்தர்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

முன்னோர் வழிபாட்டில் முன்னிலை பெறும் ராமேஸ்வரம் கோவில் .

ராமர் வழிபட்ட தலம்.

பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.

இராமேஸ்வரம் வங்காளவிரிகுடா கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.

காசிக்கு நிகரான புண்ணிய தலம்.

காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவே, இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.

எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம்.

இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு வழிபாடு செய்யவும், பித்ரு சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்களை போக்கிக்கொள்ளவும் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, திருமறைக்காடு, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி, திருக்குற்றாலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், காவிரிப்பூம்பட்டினம், திருப்புவனம், திருவெண்காடு என பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.


தல வரலாறு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.

இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம். அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன.

இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி பாவம் நீங்குவதற்காக முனிவர்களின் அறிவுரைப்படி , ஸ்ரீராமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து , அதற்குள் கைலாசத்திலிருந்து ஒரு லிங்கம் கொணருமாறு , ஸ்ரீராமன் அனுமனை அனுப்பினார். அனுமன் லிங்கம் கொணரத் காலத் தாமதம் ஆனதால், சீதை மணலால் செய்த லிங்கத்தை குறித்த நல்ல நேரத்தில் ஸ்தாபித்து இராமன் , சீதை, இலக்குவன், முனிவர்கள் அனைவரும் வழிபட்டனர். தாமதமாக லிங்கம் கொணர்ந்த அனுமன், கோபமாக சீதை மணலால் செய்த லிங்கத்தை அகற்ற முயற்சித்து தோல்வியுற , அனுமனை ஆறுதல் செய்வதற்காக , இந்த லிங்கத்தின் அருகிலேயே அனுமன் கொணர்ந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து , அதற்கே முதற்பூஜை செய்ய வேண்டுமென ஸ்ரீராமன் ஆணையிட்டார். அதன்படி, இப்பொழுதும் அனுமன் கொணர்ந்த காசி விஸ்வநாதருக்கு முதலில் பூஜை செய்த பின்னரே சீதை பிரதிஷ்டை செய்த இராமநாதருக்கு பின்னர் பூஜை செய்யப்படுகிறது.

காசிக்குச் சென்று அங்கிருந்து புனித கங்கையைக் கொணர்ந்து வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து இராமேஸ்வரத்தில் வழிபாடும் , வங்காள விரிகுடாவும் இந்துமாக் கடலும் கூடும் இடமான சேது என்று அழைக்கப்படும் தனுஷ்கோடியில் முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பர். இராமேஸ்வரம் கோவில் வழிபாட்டிற்கு முன்னும் , பின்னும் இரெண்டு கடல்கள் சங்கமமாகும் சேதுவில் முழுகினால் தான் காசியாத்திரை பூர்த்தியாகும். என்றும் கூறுவர். தற்பொழுது இராமேஸ்வரத்திற்கு முதலில் போய் பின்னர் தனுசுகோடிக்குச் சென்று வருகிறார்கள்.

அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.

"மகாளயம்' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

ஆஞ்சநேயர் தாமதமாக காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

உப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.

அக்னி தீர்த்தம்: ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

காலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்தார், இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள்.

தீர்த்தமாடுதல் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.

தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு "பாதாள பைரவர்' என்று பெயர்.

சுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

ஸ்படிக லிங்க பூஜை : மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

12 ஜோதிர்லிங்கம் : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

விவேகானந்தர்: வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,""அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவி சாய்க்கிறார்.

சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

தீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு "கோதண்டராமர்' என்பது திருநாமம்.

ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

வால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது.

கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.


கோவில் அமைப்பு:

இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது.

பர்வதவத்தினி அம்பாள் சந்நிதி:

இராமநாதர் சந்நிதிக்கு தென்புறம் உள்ள வாயில் வழியாக இச்சந்நிதிக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில் அஷ்டலட்சுமிகளைத் தரிசிக்கிறோம். ஸ்வாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது , மிகவும் மகத்துவம் உடையது என்பர். மதுரை , திருநெல்வேலி போன்று அமைந்துள்ளது. இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இச்சந்நிதியில் உள்ள ஸ்ரீசக்கரத்தை வழிபட்டு , முன் மண்டபத்திற்கு வந்தால் , இடது கை பக்கத்தில் அஷ்டலட்சுமிகளையும் , எதிர்பக்கத்தில் கொடிமரத்திற்கு அடுத்து சுவாமி அம்பாள் கல்யாண கோலத்தில் இருக்க , அருகில் திருமால், பிரமன் , மகாலட்சுமி உள்ளனர்.
அம்பாள் கோவிலின் தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி சந்நிதியும் , வட மேற்கு மூலையில் பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதியும் உள்ளன. சுவாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில், விஷாலட்சுமியம்பிகை சந்நிதிக்கு அருகில் கோடி தீர்த்தம் உள்ளது. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஜோதிர் லிங்கத்தையும் , தென் கிழக்கு மூலையில் அழகான சகஸ்ரலிங்கத்தையும் தரிசிக்கலாம்.

அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.

மூன்றாம் பிரகார சிறப்பு : முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கோதண்டராமர் கோவில்

இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. தனுஷ்கோடி செல்லும் இருப்புப்பாதை அழிந்துவிட்டதால் யாத்திரிகர்கள் வண்டிகளிலும் நடந்தும் தான் இக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீபீஷணர் சரணாகதி அடைந்ததும் போருக்கு முன்னரே விபீஷணருக்கு இலக்குமணன் பட்டாபிஷேகம் நடத்தி வைத்ததும் இவ்விடத்தில் தான் என்பர். இராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிமாதத்தில் நடைபெறும் இராமலிங்க பிரதிஷ்டை விழாவும் ஒன்று. இவ்விழாவின் போது , ஸ்ரீராமரின் உற்சவ மூர்த்தி விபீஷணர் பட்டாபிஷேகத்திற்காக இங்கு எழுந்தருளுவார். இதற்கு முந்தைய நாளில் இராமேஸ்வரம் கடைத் தெருவில் இராவணவதமும் , பட்டாபிஷேகத்திற்கு மறுநாள் இராமேஸ்வரத்தில் இராமலிங்க பிரதிஷ்டை விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

திருப்புல்லாணி தர்ப்பசயனம்

இத்தலம் இராமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து 7 மையில் தொலைவில் தெற்கில் உள்ளது. இதன் அருகில் சேதுக்கரை என்ற கடற்கரையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடற்கரையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடலை நோக்கி கடலை அடக்கும் விதத்தில் தென்திசை நோக்கி நிற்கின்றார். ஆதி சேது என்ற இவ்விடத்தில் சமுத்திரஸ்நானம் செய்து விட்டு ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திருப்புல்லாணி வரலாம். இங்கு ஆதி ஜெகந்நாதர் . என்ற பெயருடன் திருமால் இரண்டு தாயாருடன் காட்சி தருகிறார். இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள ஒரு சந்நிதியில் ஸ்ரீராமர் தர்ப்பசயனப் பெருமாளாக காட்சி தருகிறார். இவ்விடத்தில் ஸ்ரீராமர் தர்ப்பைப் புல் மீது இருந்து தவம் செய்ததாகவும் , கடலரசனான வருணன் வரக் காலதாமதம் ஆனதால் , அவன் மேல் கோபம் கொண்டு , அவன் கர்வத்தை அடக்கி பின் அவன் உதவி கொண்டு சேது அணையைக் கட்டியதாகவும் கூறுவர்.

தேவி பட்டினம்

இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து 10 மைல் தொலைவில் வடக்கில் உள்ளது. இவ்வூரின் கடற்கரையில் கடலுக்குள் நவகிரகங்களை குறித்து ஒன்பது நவபாஷாணக் கற்களை ஸ்ரீராமர் நிறுவி நவகிரகங்களை வழிபட்டதாகக் கூறுவர். சில நாட்களில் 9 கற்களையும், சில நாட்களில் கடல் நீரில் மூழ்கி சிலவற்றையும் நாம் தரிசிக்க இயலும். ஒன்பது கற்களையும் நாம் சுற்றி வந்து வழிபட அழகான சுற்று மேடை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கள் :

இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும்.

இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.


போன்:  - -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

இந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது.முன்னோர் வழிபாட்டில் முன்னிலை பெறும் ராமேஸ்வரம் கோவில்.

ராமர் வழிபட்ட தலம்.

பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.

காசிக்கு நிகரான புண்ணிய தலம்.

எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும்.

இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.