சற்குணேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சற்குணேஸ்வரர், சற்குணநாதர், மணக்கோல நாதர,கல்யாணேஸ்வரர், இடும்பாவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மங்களவல்லி, மங்களநாயகி, கல்யாணேஸ்வரி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : பிரமதீர்த்தம், அகத்தியதீர்த்தம், எமதீர்த்தம்.
வழிபட்டோர் : இடும்பன், பிரமன், அகத்தியர், எமன், இராமர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - மனமார்தரு மடவாரொடு்.


தல வரலாறு:

இயற்கை வளம் மிக்க சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனமாகும். மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இத்தலம் "இடும்பாவனம்" எனப் பெயர் பெற்றது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் "தலைமறைவு" வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன் இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார். மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.

பிரம்மதேவர் சத்வ குணங்கள் பெற வேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இத்தல ஈசர் சற்குணேசர், ஸத்குண நாதர் என்று அழைக்கின்றனர். அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக "இடும்பாவனம்" புகழப்படுகின்றது. இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக் காணலாம். இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை

கோவில் அமைப்பு:
நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியன ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் உள்ளனர். நாற்புறமும் அகலமான மதில்கள் சூழ ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றவுடன் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரே பெரிய பிரகாரத்துடன் ஆலயம் விளங்குகிறது. முதலில் ராஜகோபுரத்திற்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர். சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம். வாழ்வில் ஏற்படக் கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த இடும்பாவனேஸ்வரர் என்னும் சற்குணேஸ்வரர். "இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்" என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் 10-வது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான அம்மையும், அப்பனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது. சந்நிதிக்குள் தியாகேசர், அம்மையோடு திருவாபரணங்கள் ஜொலிக்க அற்புத தரிசனமளிக்கின்றார்.

மங்கள நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவள் இந்தத் தாயார். அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தமானவர். கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி-தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியன இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.

சம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது இவ்வூரின் மணலெல்லாம் லிங்கமாகத் தென்பட, கரங்களால் ஊன்றி வந்து ஆலயத்தை அடைந்து திருப்பதிகம் பாடியதாக கூறப்படுகிறது. அப்பரும் தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் ஒன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சிறப்புக்கள் :

இடும்பனின் ஊர் இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள குன்றளூர் என்பர்.

இறைவன் அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய தலம். (சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது.)

வில்வவனம், சற்குணேச்சபுரம், மங்கலநாயகிபுரம், மணக்கோலநகர் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்று; ஆகவே பிதிர் வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.

மராட்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.


போன்:  +91- 4369 - 240 349, 240 200

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூதிருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்தலத்திற்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கடிக்குளம் இத்தலத்திலிருந்து 1 கி.மி. தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இறைவன் அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய தலம். (சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது.)
இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்று; ஆகவே பிதிர் வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.