இறைவர் திருப்பெயர் : உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : மங்கள நாயகி, அங்கவள நாயகி, தேக சவுந்தரி
தல மரம் : அரசமரம், வில்வம், பிரம்ம தீர்த்தம்s
தீர்த்தம் : பூமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்
வழிபட்டோர் : புரூரவஸ் மன்னன், எமதர்மன், நந்தி பகவான், அஷ்டதிக் பாலகர்கள், சித்தர்கள், பூமாதேவி, வரகுணபாண்டியன்
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்
தல வரலாறு:
இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு.
இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 97 வது தேவாரத்தலம் ஆகும்.
பிரமாண்டமான நடராஜர்
நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.
அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.
லையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.
‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.
‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். இத்தல வைத்தியநாத சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றது.
ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும்.
இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.
கோவில் அமைப்பு:
முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.
16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.
வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் இடதுபுறம் உள்ள வழியாகச் சென்றால் தனிக் கோவிலில் அம்பாள் சந்நிதியை அடையலாம். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது. அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். பிரகார வலம் முடிந்து அடுதுள்ள வாயில் கடந்து உள்மண்டபம் சென்றால் இடதுபுறம் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது.
இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார். இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மருவு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம். பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள்.
நலம் தரும் சனிபகவான்: இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.
சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அகத்தியர் வழிபட்ட தலம்.
சிறப்புக்கள் :
வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து "வசுதரா' என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும்.
போன்:
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved