தல வரலாறு:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் ஒரு குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது. திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று.
மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.
கீழேயுள்ள குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இக்குடைவரைக் கோயில் நரசிம்மபல்லவன் காலத்தது.
குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது.
இந்தக் குடைவரையில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவரையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.
இக்குடைவரையில் இருக்கும் கொற்றவையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்கு தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கைப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு.
போன்: - -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது.
© 2017 easanaithedi.in. All rights reserved