இறைவர் திருப்பெயர் : அக்கினீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை.
தல மரம் : வன்னி. தீர்த்தம் : தீர்த்தக்குளம்.
வழிபட்டோர் : அக்கினி.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நிணம்படு சுடலையின் நீறு.
தல வரலாறு:
மக்கள் வழக்கில் 'கள்ளிக்காடு' என்று வழங்குகிறது. கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின் 'கொள்ளிக்காடு' என்று பெயர் பெற்றது.இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒரு காலத்தில் இக்கோயிலை "கரியுரித்த நாயனார் கோயில்" என்றும் அழைத்து வந்ததாக தெரிகிறது. தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்னும் தலமாகும். திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய தலங்களின் நடுவே அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களையும் கொண்ட இத்தலத்தின் இறைவன் அக்னீஸ்வரர். சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. மேறகு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் மேறகு வெளிப் பிரகாரத்தில் நாம் காண்பது கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர். பெயருக்கு ஏற்றாற்போல் இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் விளங்குகின்றனர். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்குள்ள முருகன் மற்ற கோயிலைப்போலல்லாமல் கையில் வில்லேந்திய தனுசு சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக கோவிலுக்கு எதிரில் உள்ள வன்னியும், தீர்த்தமாக கோயிலுக்கு எதிரில் உள்ள குளமும் உள்ளது. மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவானின் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் மிகச்சிறந்த அம்சமாகும். திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம். நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு இடையது இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம். சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால் அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர். நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.
சிறப்புக்கள் :
சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது..
சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலகிய தலமாகும்.
மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று சிவந்த நிறமாகவுள்ளது. (அக்கினி வழிபட்டது.)
இத்தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த 120 ஏக்கர் நன்செய் (கோயிலை சுற்றி) இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.
போன்: +91- 4369 - 237 454, +91- 4366 - 325 801
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மி. சென்றால் முதலில் திருநெல்லிக்காவல் தலமும் அடுத்து 2 கி.மி. தொலைவில் திருதெங்கூர் தலமும் அதையடுத்து மேலும் 4 கி.மி. சென்றால் திருகொள்ளிக்காடு தலத்தை அடையலாம். இத்தலத்திற்கு கச்சனத்திலிருந்து மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved