இறைவர் திருப்பெயர் : சந்திரமௌலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி .
தல வரலாறு:
சென்னை அண்ணாநகரில் பல நூற் றாண்டுகளுக்குமுன் "பாலீஸ்வரர்' என்ற பெயரில் ஒரு கோவில் இருந்தது. காலப்போக்கில் அவ்வாலயம் சிதைந்து கவனிப்பாரற்றுப் போய்விட்டது. அப்பகுதியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தி வீட்டுமனைகளாகப் பிரித்து ஒதுக்கீடு செய்தது. அப்போது அப்பகுதியை ஒட்டி காலியாக இருந்த மனையில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அது சூரிய பிம்ப வகை யிலான அபூர்வ சிவலிங்கமாகும். சிவலிங்கத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை வெளியில் எடுத்து மேற்கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். 1970-ஆம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரை நேரில் சந்தித்த மக்கள் இச்சிவலிங்கம் பற்றிய விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர், அந்தச் சிவலிங்கம் முன்பு அந்தப் பகுதி யில் இருந்த பாலீஸ்வரர் கோவிலுக்குரிய சிவலிங்கம் என்பதைத் தெரிவித்தார்.
சிவபெருமானின் திருக்கோலங்களை 25 திருமூர்த்தங்களாகப் பெரியோர் கூறுவர். அவற்றில் சந்திரமௌலீஸ்வரர் எனும் திரு மூர்த்தமும் ஒன்றாகும். காஞ்சி மகாபெரியவர் அண்ணாநகரில் பக்தர்கள் வழிபட்ட சிவலிங்கத் திற்கு சந்திரமௌலீஸ்வரர் எனப் பெயரிட்டார். திரிபுரசுந்தரி என்ற பெயரால் அம்பாளுக்குச் சந்நிதி அமைக்கவும், பரிவார தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைத்து வழிபடவும் அறிவுரை தந்து ஆசி வழங்கினார். அவர் வழிகாட்டியபடி நவகிரகங்கள், துவார முருகர், விநாயகர், ஐயப்பன் மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து 1978-ல் சந்திரமௌலீஸ்வரருக்கு கும்பாபிஷேகத்தையும் நடத்தினர். பின் பக்தர் கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் விநாயகர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சனேயர், கால பைரவர், சிவகாமி உடனுறை உற்சவர் (நடராஜர்), கொடி மரம் முதலானவை சிறப் பான முறையில் அமைக்கப்பட்டன. 1996-ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது,42 அடி உயரத்தில் புதிதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 28-1-2007-ல் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோவிலின் நுழைவாயில் தெற்குப்புறம் அமைந்துள்ளது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். திருச்செந்தூர், சுவாமி மலை, வடபழனி போன்ற முருகன் கோவில்கள் தெற்குப்புறம் நுழைவாயில் அமைந்துள்ள கோவில்களாகும். அவை விசேஷமான பரிகாரத் தலங்களாக விளங்குகின்றன. சந்திரமௌலீஸ் வரர் கோவிலும் தெற்குப் பார்த்த சந்நிதி உடையதாக இருப்பதால் இதையும் பக்தர்கள் பரிகாரத் தலமாக வழி பட்டு வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப் பட்டு மரண பயத்தில் உள்ளவர்களின் அச்சம் போக்க நடத்தப்படும் ஜபம் மிருத்யுஞ்சய ஜபம் எனப்படும். யாகமும் செய்வதுண்டு. பக்தர் களின் யம பயத்தைப் போக்கும் வகையில் அவர் கள் வேண்டுகோளின் பேரில் கடந்த பத்து ஆண்டுகளாக சந்திர மௌலீஸ்வரர் கோவிலில் மிருத்யுஞ்சய ஜபம் நடத் தப்பட்டு வருகிறது.
சந்திரமௌலீஸ்வரரை வணங்கும் பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையும்; தீராத நோய்களையும் நொடிப்பொழுதில் போக்கிவிடுவார் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது. மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப் படுகிறது. கலசங்களைப் பிரதிஷ்டை செய்து ருத்ர மந்திரத்தை ஜபம் செய்து செய்யும் யாகம் ருத்ர ஹோமம் எனப்படும். ஸ்ரீ ருத்ர மந்திரத்தால் யாகங்களைச் செய்து கலசத்தில் உள்ள நீரை உருவேற்றி அந்த நீரால் சிவனை அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம் ஆகும். பரிகாரத் தலமான இக்கோவிலில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் அவர்கள் வேண்டிய வண்ணம் ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாவது சந்திர மௌலீஸ்வரருக்கு ருத்ரா பிஷேகம் நடைபெறுவது கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.
சிறப்புக்கள் :
யம பயம் போக்கும் மிருத்யுஞ்சய ஹோமத்துக்குச் சிறப்பு பெற்ற சந்திமௌலீஜ்வரர் ஆலயம்!
சந்திரமௌலீஸ்வரரை வணங்கும் பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
போன்:
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு சென்னை மேற்கு அண்ணாநகரில் 15-ஆவது பிரதான சாலையில் அமைந்துள்ளது சந்திர மௌலீஸ்வரர் ஆலயம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 5.30மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved