இறைவர் திருப்பெயர் : ஸ்ரீமேகநாதர் (மிஹராஅருணேஸ்வரர்,முயற்சிநாதர்),
இறைவியார் திருப்பெயர் :ஸ்ரீலலிதாம்பிகை (சாந்தநாயகி),சௌந்தரநாயகி,
தல மரம் : மந்தாரை, வில்வம்,
தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி,
வழிபட்டோர் :ஸ்ரீசனிஸ்வரர், சூரியன், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,
தல வரலாறு:
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம்.
இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.
கோயிலின் உள்ளே கோயில்
திருமீயச்சூர் மேகநாதர் கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு.
வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு்.
இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.
கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று.
இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.இது காளிதேவி பூஜித்த தலம்.
இருப்பதிலேயே மிகப் பெரிய பாவம், இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும் செய்தார்! சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான். சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன் தான் வாலி. எண்ணம் ஈடேறியது. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு' என்றார். அருணன், மோகினியாக மாறினான். அழகில் சூரியனை மயக்கினான். விளைவு.. சுக்ரீவன் பிறந்தான்.
தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா, சிவனார்? சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்' என அருளினார். இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' என்று கேட்க... வெகுண்டாள் ஸ்ரீபார்வதி. 'உரிய நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?' என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போன சிவனார், 'எற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார். பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார். ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறையில், அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறார், சித்திரை மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, ஸ்வாமியின் மீது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!
ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர் மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.
கிளியுடன் துர்க்கை, மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்.
இரண்டு லிங்கம், இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம்.
சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.
இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது.
பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக "மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.
அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.
சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள "கஜப்ரஷ்ட விமானம்" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
போன்: +91-4366-239 170, 94448 36526.
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved