அக்னீஸ்வரர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்,
இறைவியார் திருப்பெயர் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்,
தல மரம் : புன்னை மரம்,
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்,
வழிபட்டோர் :திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,சுந்தரர்,
தேவாரப் பாடல்கள் :திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,சுந்தரர்,

தல வரலாறு:

திருநாவுக்கரசர் இறைவனடி (முக்தி )அடைந்த தலம்.

இந்த அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளேயே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.

அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும்.

இத்தலத்து அம்பாள் கருந்தார்குழலி மிகவும் விசேசமானவள் . திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து சாயரட்சை காலத்தில் வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம்.

ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார். இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சதயம் நட்சத்திர நாளிலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம். அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திலேயே தினமும் புதுப்புது சுயம்பு லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை திருப்புகலூரில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் சுயம்புலிங்கத்தை எடுத்து சென்று தாயாரிடம் ஒப்படைக்க நினைத்து, கோயிலை சுற்றிலும் அகழி தோண்டி லிங்கத்தை எடுக்க முயன்றான். அகழி முழுவதும் தண்ணீர் நிரம்பியதே தவிர, லிங்கம் பெயரவில்லை. என்ன செய்வது என தெரியாமல் தன் உயிரை விட நினைத்தான். அப்போது விண்ணில் அசரீரி தோன்றி, பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என கூறி மறைந்தது. தலையில் புன்னை மலருடன் அவனது தாயார் பூஜித்த இடத்துக்கு சென்றது லிங்கம். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே லிங்கம் திரும்பி விட்டது.

ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு “அக்னீஸ்வர சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.

திருநாவுக்கரசர் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் முக்தி கொடுத்தார். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பருக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்தை ஒட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். இவருக்கு சரண்யபுரீஸ்வரர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவி கருந்தார் குழலி. மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்துள்ளார். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள்விருத்தி, நல்ல ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.

திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.

இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும்.

மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். கோவிலின் பரப்பளவு சுமார் 73000 சதுர அடி. கிழக்கு-மேற்கு மதில் சுவர் நீளம் 325 அடி. வடக்கு-தெற்கு மதில் சுவர் நீலம் 225 அடி. கோவில் மதில் சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கிறது. மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்ளதாகவும் சுமார் 90 அடி உயரமும் உள்ளது. உள்ளே நுழைந்ததும் நாம் முதலில் காண்பது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர்.


போன்:  +91 4366-237 198,237 176, 94431 13025,
                     94435 88339

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டிணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்


திருநாவுக்கரசர் இறைவனடி (முக்தி )அடைந்த தலம்.

இந்த அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளேயே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.

அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம்.