இறைவர் திருப்பெயர் : பொன்வைத்த நாதேசுவரர், சுவர்ண ஸ்தாபனேஸ்வரர்,
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி,
தல மரம் :ஆத்தி,
தீர்த்தம் : சொர்ண புஷ்கரிணி, குளம்,
வழிபட்டோர் : அகத்தியர், இந்திரன், நாகராஜன், பிரம்மா,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,
தல வரலாறு:
பிரம்ம ரிஷி தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார்.
சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த அற்புதம் நிகழ்ந்த தலம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி என்பவர், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. எனவே இவர் தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதை காணலாம். இந்த தேன் கூட்டிற்கு நாள் தோறும் பூஜை நடக்கிறது.
திருச்சிற்றேமத்திற்கு வடபாலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்த மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை வெட்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனியைக் கண்டான். அவ்விடத்துக் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதன் அடையாளமாக சிவலிங்கத்தின் மீது வெட்டுக்காயம் உள்ளது.
இவ்வூரில் ஒரு வணிகர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மனைவி கருவுற்று சில நாட்களில் பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். வணிகர் வெளியூர் சென்ற போது அவர் மனைவி கருவுற்று இருப்பது தெரியாது. தனியாக ஊரிலிருந்த மனைவி சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள். அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசுவைத்து உதவ, அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது. இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவிட, மகவினைப் பெற்றெடுத்தாள். சிலகாலம் கழித்து வணிகர் ஊர் திரும்பினார். ஊர் மக்கள் சிலர் அவர் மனைவியின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் கோயிற்கதவைத் தானே திறக்கச் செய்தும், சந்நிதிக்கு பின்னிருந்த ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து கோவிலுக்கு முன்புறம் வரச்செய்தும், பலிபீடத்திற்கு முன்னிருந்த நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் இடம் மாறியிருக்கும்படி போகச் செய்தும் பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்பர்.
முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் திருக்கோவிலுக்கு வர நேரமாகி வட்டது. கோவில் திருக்கதவுகள் காப்பிடப்பட்டு விட்டன. பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம். இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. இத்திருக் கோயிலின் பக்கத்தில் திருமால் ஆலயம் உள்ளது. இவ்வூருக்குக் கிழக்கில் திருவாய்மூரும், மேற்கில் கைச்சினமும், வடக்கில் வலிவலம், திருக்குவளை, குண்டையூரும், வடகிழக்கில் எட்டுக்குடியும் உள்ளன.
இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜகேசரிவர்மன், இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியர்களில் வரகுண மகாராசன், வல்லப தேவனாகிய தெய்வ வீர பாண்டியன், மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் வேங்கட பதி ராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இக்கோயிலில் உள்ள மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் என்றும், சகம் 1381 அதாவது கி. பி. 1459 இல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேம முடையார், பழையவனத் தம்பிரானார், பழையவனப்பெருமாள் எனவும் கூறப்பெற்றுள்ளது. உள்ளே நுழைந்ததும் பெரிய ஆத்தி மரமும் ஆத்தி மர விநாயகரும் உள்ளனர். அடுத்து நந்தி , பலிபீடம் என உள்ளதை காணலாம். இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறை அர்த்த மண்டப சன்னலில் தேன்கூடு உள்ளது.
பிரகாரத்தில் விநாயகர், அடுத்து மகாலட்சுமி, அடுத்து முருகர் என உள்ளனர். கோமுகத்தின் அருகில் ஒரு லிங்கமும் சண்டேசர் சன்னதியில் சிறிய மகாலட்சுமி சிலையும் உள்ளது. வடகிழக்கு மண்டபத்தில் எண்கர பைரவர், பிரம்மரிஷி, சனைச்சரன், ஐயனார், மாணிக்கவாசகர், குமரன் சூரியன் சிலைகள் உள்ளன.
கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே தலவிருட்சம் ஆத்தி மரம், நந்தி, பலிபீடம் உள்ளன. தல வரலாற்றின் படி நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் உள்ளது. ஆத்தி மரத்தடியில் ஆத்திமர விநாயகரும் உள்ளார். இத்தல இறைவன் கிழக்கு நோக்கு காட்சி தருகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதி தெற்கு தோக்கி அமைந்துள்ளது. பிராகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பிரமரிஷி, ஐயனார், பைரவர், சனி பகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை. வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர், சந்திரசேகரர் மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய வணிகர், அவர் மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்திற்கு வடக்கில் ஆலய தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி உள்ளது.
போன்: +91- 94427 67565, 8754779660
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் ஆலத்தம்பாடி வந்து அங்கிருந்து சித்தாய்மூர் என்ற கைகாட்டி உள்ள இடத்தில் கிழக்கே பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. சென்றால் இத்தலம் அடையலாம். போக்குவரத்து வசதிகள் குறைவானதால் தனி வாகனத்தில் செல்வது நல்லது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved