மூலவர் : முல்லைவனநாதர்
அம்மன்/தாயார் : கருகாத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை
தலவிருட்சம் : முல்லை
தீர்த்தம் : க்ஷீரகுண்டம், சத்தியகூபம், பிரம்மதீர்த்தம் , விருத்தகாவிரி
வழிபட்டோர் : விசுவாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்தசக்கரவர்த்தி, பிரம்மன், கௌதமமுனிவர், சந்திரன்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 18வது தலம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.
லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். இங்குள்ள நந்தியும், தல விநாயகரான கற்பக விநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள் .
திருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன.
கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இது விசேசமானதாகும். இந்த விளக்கெண்ணெயை பிரசவவலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும்.
இக்கோயிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதே, இக்கோயிலில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும் .
சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுச்சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.
முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத் திருமேனியை முல்லைக்கொடிகள் தழுவிப் படர்ந்திருந்தன. சுயம்புமூர்த்தி திருமேனியில் இன்றும் முல்லைக்கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.
தல வரலாறு:
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம் மாதவிவனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவிவனம் (முல்லைவனம்) என்றும், கரு + கா + ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
முல்லைகாடாக இருந்த இந்த இடத்தில், நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் வசித்து வந்தனர். தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கி குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர்,
வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்த போது
நிருத்துவமுனிவர் ஒரு முக்கிய காரணமாக் வெளியூர் செல்ல நேர்ந்தது. அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மயக்கமடைந்து வீட்டில் படுத்து கொண்டிருந்தாள்.
அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து உணவும் தண்ணீரும் கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு உணவளிக்க முடியவில்லை.அது அறியாத முனிவர் தன்னை அவமதித்ததாக கருதிசாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. முனிவரின் கோபத்திற்கு ஆளாகிவிட்ட அச்சத்தில் அவள் முல்லைவனநாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். வேதிகை பக்திக்கு மெச்சி அவள் கருவைக் காப்பாற்றி அருள்புரிந்தாள்.
இறைவியின் அருள் மகிமையைக் ஊர் திரும்பிய நிருத்துவ முனிவர் கேள்விப்பட்டு, நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாகவே எழுந்தருளி, பெண்களின் கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க அம்பாள் அவ்வாறே அருள்பாலித்தாள்.
பிரம்மன் இத்தலத்திற்கு வந்து, தென்மேற்கு மூலையில் தன்பெயரால் ஒரு தீர்த்தத்தை நிறுவி, முல்லைவனநாதரைப் பூஜித்தான். கௌதம முனிவர் இத்தலத்திற்கு வந்து புனித நீராடி ஒரு இலிங்கம் செய்து இறைவனை பூஜித்தார். அதுவே கௌதம இலிங்கம் என தனிச்சன்னிதியாக உள்ளது.
தட்சன் சாபத்தால் சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு சிவபூஜை செய்து நற்கதி பெற்றான். இன்றும் ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் சந்திரனின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்சஆரண்யங்கள் ஐந்து அவை:-
1. கருகாவூர் – முல்லைவனம், 2. அவளிவணல்லூர் – பாதிரிவனம், 3. அரதைப்பெரும்பாழி – வன்னிவனம்,
4. இரும்பூளை – பூளைவனம், 5. கொள்ளம்புதூர் – வில்வவனம் என்பன. இத்தலம் ஐந்தில் ஒன்றான முல்லைவனமாகும்.
பஞ்சஆரண்ய ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படும் 5 சிவஸ்தலங்களை ஒரே நாளில் 5 காலபூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்துவந்தால் இப்பிறவியில் செய்த சகல பாபங்களும் நீங்கி மறுபிறவி இல்லா நல்வாழ்வு கிட்டும் என்று அகஸ்திய முனிவர் கூறியுள்ளார். அந்த வகையில் திருக்கருகாவூர் ஸ்தலம் விடியற்காலை உஷத்காலம் (காலை 5-30 மணிமுதல் 6 மணிவரை) வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும்.
கோவில் அமைப்பு:
கி.பி. ஏழாம்நூற்றாண்டு கோயில் இது, இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பராந்த சோழன் மற்றும் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. 460 அடிநீளமும், 285 அடி அகலமும் உள்ள இக்கோவிலுக்கு கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரமும் தென்திசையில் மற்றொரு நுழைவுவாயிலும் இருக்கிறது.
கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால்உருவாக்கப்பட்ட ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 3 நிலைகளை உடைய 2-ம் கோபுரம் வாயில் வரை நீண்டமண்டபம் காணலாம். 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், இரட்டை நந்திகள் ஆகியவற்றைக் காணலாம்.
உட்பிரகாரத்தை வலம்தொடங்கினால் 63 மூவர்சந்நிதி, நால்வர்சந்நிதி, நிருதி விநாயகர்சந்நிதி, வள்ளி தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி மற்றும் மகாலட்சுமி சந்நிதி, தக்ஷிணாமூர்த்தி, சந்தனாச்சாரியார்கள், கஜலக்ஷ்மி, தலமரம்முல்லை, சபாமண்டபம், நிருத்துவமுனிவர் பூஜித்த இலிங்கம் ஆகியவற்றைக்
காணலாம்.
கருவறைக்குள் கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாகத் தோன்றியவர். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
இறைவியின் சந்நிதி சுவாமி சந்ந்நிதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்து இறைவி கருகாத்தநாயகி என்றும் கர்ப்பரட்சாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள். அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.குழந்தைப்பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் இங்கு அம்பாள் கருகாத்த நாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.
அம்பிகையின் கோயில் தனியே திருச்சுற்றுடனும், ஒரு மண்டபத்துடனும் விளங்குகின்றது. அம்மன் கோயிலுக்கு வெளிப்பக்கம் கௌதமர் பூசித்த இலிங்கம் தனி சன்னிதியாக அமைந்துள்ளது. நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும். சூரியனுக்கு எதிரில் குரு உள்ளார்.
திருமணமாக, குழந்தை உண்டாக கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லவேண்டும்:
ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம்
பதிம் மேகுருதே நம:
சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்:
ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட
ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ
கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச
பாளையமாம் நமஸ்தே
சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்க வேண்டும்:
மவத்யுத்தரே பார்ஸ்வே ஸீரதா நாம யக்ஷிணீ
தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீ பவேது
சிறப்புக்கள் :
திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும், கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம்.
மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் ,கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.
சருமநோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச்சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள்.
முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்து வழிபடுகின்றனர்.
திருவிழா:
வைகாசி - வைகாசிவிசாகம் ,
பிரம்மோற்சவம் – கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா
புரட்டாசி - நவராத்திரி – அம்பாளுக்கு லட்சார்ச்சனை - 10 நாட்கள் திருவிழா ஆடிபூரம்
இவை தவிர நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம் , கந்தர்சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்
போன்: -
குருக்கள் 88700 58269, 97891 60819
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையிலுள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்துதெற்கே சுமார் 7 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மி. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவிலும், இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது.
© 2017 easanaithedi.in. All rights reserved